Monday, August 31, 2026

அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் வானகரம் அறிமுகப்படுத்தும் ‘அப்போலோ நம்பிக்கை’ திட்டம் புற்றுநோய் சிகிச்சைக்குப் பிந்தைய வாழ்க்கைக்கு ஆதரவு

அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் வானகரம் அறிமுகப்படுத்தும் ‘அப்போலோ நம்பிக்கை’ திட்டம் புற்றுநோய் சிகிச்சைக்குப் பிந்தைய வாழ்க்கைக்கு ஆதரவு

சென்னை, 31 ஆகஸ்ட் 2026: புற்றுநோய் பாதிப்பிற்கான சிகிச்சையிலிருந்து மீண்டவர்கள் மற்றும் அவர்களைக் கவனித்துக்கொள்பவர்களுக்காக ‘அப்போலோ நம்பிக்கை’ என்ற புதிய ஆதரவு சமூக அமைப்பை வானகரம் அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது. தீவிர சிகிச்சைக்குப் பிறகும் தொடர்ந்து இணைப்பில் இருக்கவும், விழிப்புணர்வுடன் செயல்படவும், தகுந்த ஆதரவைப் பெறவும் அவர்களுக்கு உதவுவதே இந்த சமூக நல ஆதரவு திட்டத்தின் குறிக்கோளாகும்.

புற்றுநோயிலிருந்து மீண்டவர்களுக்கான சிறப்பு செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முன்னெடுப்பை அப்போலோ அறிமுகம் செய்துள்ளது. இந்நிகழ்வில் புற்றுநோயை எதிர்த்துப் போராடி வென்ற சுமார் 100 நபர்களும், அவர்களைக் கவனித்துக்கொள்பவர்களும் கலந்துகொண்டனர். புற்றுநோய்க்கு எதிரான சவால்மிக்க பயணத்தில் அவர்களின் மனஉறுதியைக் கௌரவிப்பதுடன், சிகிச்சை முடிந்த பிறகும் தொடரும் சவால்களை அடையாளம் காண உதவுவதும் இந்நிகழ்வின் நோக்கமாகும்.

பலருக்கும் புற்றுநோய் சிகிச்சையை வெற்றிகரமாக நிறைவு செய்வது ஒரு முக்கியமான மைல்கல். இருப்பினும், சிகிச்சைக்குப் பிந்தைய வாழ்க்கை பல்வேறு புதிய கேள்விகளையும் சவால்களையும் முன்வைக்கக்கூடும்; ஊட்டச்சத்து மற்றும் வாழ்க்கைமுறை மாற்றங்கள், உணர்வுரீதியான நல்வாழ்வு, மறுவாழ்வு செயல்பாடுகள், மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவது மற்றும் நோய் மீண்டும் வந்துவிடுமோ என்ற அச்சத்தை எதிர்கொள்வது போன்றவை இதில் அடங்கும். இத்தகைய சவால்களை எதிர்கொள்ள, ஒத்த அனுபவங்களைக் கொண்ட பிற புற்றுநோய் போராளிகளுடன் தொடர்புகொண்டு அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள ஒரு தளத்தை வழங்குவது ‘அப்போலோ நம்பிக்கை’ திட்டத்தின் முதன்மை நோக்கமாகும். தங்களுக்கு ஏற்படும் கேள்விகளுக்குத் தெளிவான விளக்கம் பெறவும், சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ளவும், மருத்துவ நிபுணர்களிடமிருந்து நம்பகமான வழிகாட்டுதல்களைப் பெறவும் ஒரு அமைப்பை உருவாக்குவதும் இதன் மற்றொரு குறிக்கோளாகும்.

இச்சமூக அமைப்பு ஆரம்பத்தில் வானகரம் அப்போலோ கேன்சர் சென்டர்ஸில் சிகிச்சை பெற்றவர்களுக்குச் சேவையாற்றும். பின்னர், எந்த மையத்தில் சிகிச்சை பெற்றிருந்தாலும் அனைத்து அப்போலோ புற்றுநோய் போராளிகள் மற்றும் அவர்களின் பராமரிப்பாளர்களுக்கும் விரிவுபடுத்தப்படும். இந்த அமைப்பில் கட்டணமின்றி இலவசமாக மொபைல் மூலமாகவே உறுப்பினராகப் பதிவு செய்துகொள்ளலாம்.

இதற்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள வாட்ஸ்அப் குழுவின் மூலம் நிபுணர்களின் அமர்வுகள், மீண்டவர்களுடனான கலந்துரையாடல்கள், ஊட்டச்சத்து மற்றும் வாழ்க்கைமுறை வழிகாட்டுதல்கள், மனநல ஆலோசனைகள் மற்றும் சமூக சந்திப்பு நிகழ்வுகளில் உறுப்பினர்கள் பங்கேற்கலாம். புற்றுநோய் சிகிச்சை சிறப்பு நிபுணர்கள், உணவியல் வல்லுநர்கள் மற்றும் மனநல மருத்துவர்களை உள்ளடக்கிய பல்துறை மருத்துவக் குழுவினர், சிகிச்சைக்குப் பிந்தைய வாழ்க்கையின் உடல், உணர்வு மற்றும் சமூக ரீதியான அம்சங்கள் குறித்து வாட்ஸ்அப் வாயிலாகத் தொடர்ந்து வழிகாட்டல்களை வழங்குவார்கள்.

இந்த விழாவில் பேசிய வானகரம் அப்போலோ கேன்சர் சென்டர்ஸின் மருத்துவப் புற்றுநோயியல் துறைத் தலைவரும் முதுநிலை நிபுணருமான டாக்டர் சுரேஷ், “புற்றுநோய் சிகிச்சையை முடிப்பது ஒரு முக்கியமான மைல்கல். ஆனால் பிந்தைய வாழ்க்கையில் தனித்துவமான சவால்கள் ஏற்படக்கூடும். அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளவும், நம்பகமான ஆலோசனைகளைப் பெறவும், ஒருவருக்கொருவர் பக்கபலமாக இருக்கவும் ஒரு சமூகத்தை உருவாக்குவதே 'அப்போலோ நம்பிக்கை' திட்டத்தின் நோக்கம். புற்றுநோய்க்குப் பிந்தைய வாழ்க்கையை அவர்கள் தனியாகக் கடந்து செல்ல வேண்டியதில்லை என்பதை உணரச் செய்யவே இதைத் தொடங்கியுள்ளோம்,” என்றார்.

இந்நிகழ்ச்சியில் நடிகர் திரு. படவா கோபி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். மேலும், அப்போலோ மருத்துவமனைகளின் குழுமப் புற்றுநோயியல் பிரிவின் தலைமை வணிக அதிகாரி திரு. ஜான் சாண்டி மற்றும் வானகரம் அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் தலைமை இயக்க அதிகாரி திரு. கார்த்திக் ராமமூர்த்தி ஆகியோரும் பங்கேற்றனர்.

அப்போலோவின் தொலைநோக்குப் பார்வை பற்றித் திரு. ஜான் சாண்டி கூறுகையில், “புற்றுநோய் சிகிச்சை என்பது மருத்துவச் சிகிச்சையோடு முடிந்துவிடுவதில்லை. அவர்கள் அன்றாட வாழ்க்கைக்குத் திரும்பும்போது தொடர்ந்து மருத்துவ சேவையும், உணர்வுபூர்வமான ஆதரவும், மறுவாழ்வு செயல்முறைகளும் தேவைப்படுகிறது. சிகிச்சைக்குப் பிந்தைய வாழ்க்கையைப் புற்றுநோய் பராமரிப்புப் பயணத்தின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகவே நாங்கள் பார்க்கிறோம். சிறப்பான வாழ்க்கைத் தரத்துடன் அவர்கள் முன்னேறிச் செல்லத் தேவையான வழிகாட்டுதல், மறுவாழ்வு மற்றும் பரஸ்பர ஆதரவை வழங்கும் கட்டமைப்பை உருவாக்குவதே இதன் இலக்காகும்,” என்று குறிப்பிட்டார்.

அப்போலோ மருத்துவமனை குறித்து:

1983-ல் டாக்டர் பிரதாப் ரெட்டி சென்னையில் முதல் மருத்துவமனையைத் திறந்தபோது அப்போலோ மருத்துவப் புரட்சியை ஏற்படுத்தியது. இன்று 76 மருத்துவமனைகள், 6600 மருந்தகங்கள், 2500+ கிளினிக்குகள் மற்றும் நோயறிதல் மையங்கள், 500+ டெலிமெடிசின் மையங்களில் 10,400 படுக்கைகளுடன் உலகின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த சுகாதாரத் தளமாக அப்போலோ உள்ளது. 3,00,000 ஆஞ்சியோபிளாஸ்டிகள் மற்றும் 2,00,000+ அறுவை சிகிச்சைகளை மேற்கொண்ட முன்னணி இதய மையங்களில் இதுவும் ஒன்றாகும். நோயாளிகளுக்குச் சிறந்த கவனிப்பு கிடைப்பதை உறுதிசெய்ய, அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் சிகிச்சை நெறிமுறைகளைக் கொண்டுவர ஆராய்ச்சியில் தொடர்ந்து முதலீடு செய்கிறது. 1,20,000 உறுப்பினர்களைக் கொண்ட அப்போலோ குடும்பம் கனிவான சிகிச்சையை வழங்குவதில் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது.