இந்திய வங்கிகளில் குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) அடிப்படையிலான நிதி மோசடிகள் 146% அதிகரிப்பு வேகமாக, அதிக பணத்தை சுருட்டும் மோசடி பேர்வழிகளின் கண்டறிய கடினமான புதிய வியூகங்களால் அதிகரிக்கும் மொபைல் மோசடிகள்
சென்னை (ஜூலை 23, 2026) — இந்தியாவில் மொபைல் போன்கள் மூலம் நடைபெறும் நிதி மோசடிகள் பெருமளவு அதிகரித்துள்ளதாக புதிய ஆய்வு அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. குறிப்பாக, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், 2025-ஆம் ஆண்டின் பிற்பாதி மற்றும் 2026-ஆம் ஆண்டின் முற்பாதிக்கு இடையே மொபைல் வழியாக அனுப்பும் குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) அடிப்படையிலான மோசடிகள் 146% அதிகரித்துள்ளன.
இந்த காலகட்டத்தில் ஒட்டுமொத்தமாக மொபைல் போன்கள் வழியாக மோசடிகள் 67% உயர்ந்துள்ளன. இதில் ஐஓஎஸ் (iOS) சாதனங்களில் 86 சதவீதமும், ஆண்ட்ராய்டு சாதனங்களில் 35 சதவீதமும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேவேளையில், வெப் பிரவுசர்கள் மூலம் நடைபெறும் மோசடிகள் 10% குறைந்துள்ளன. மோசடிக்காரர்கள் இப்போது நிதி மோசடிக்கான தங்களது தாக்குதலில் முக்கிய ஆயுதமாக மொபைல் போன்களையே மாற்றி வருவதை இது தெளிவாகக் காட்டுகிறது.
"நம்பகமான தகவல் தொடர்பு ஊடகங்களை மோசடி பேர்வழிகள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்துவதாலேயே எஸ்எம்எஸ் வழியான நிதி மோசடிகளில் மக்கள் அதிக பணத்தை இழக்கின்றனர். வாடிக்கையாளர்களைச் சிந்திக்கவிடாமல், போலியான செய்திகளை உண்மையானது என நம்பவைத்து, அவர்களை உடனடியாகச் செயல்படத் தூண்டுகின்றனர்," என பயோகேட்ச் நிறுவனத்தின் உலகளாவிய மோசடி நுண்ணறிவுப் பிரிவின் இயக்குநர் டாம் பீகாக் தெரிவித்தார்.
மனித நடத்தைகளின் வடிவங்களை கண்டறிவதன் மூலம் மோசடிகள் மற்றும் நிதிக்குற்றங்களைத் தடுக்கும் பயோகேட்ச் நிறுவனம், இந்தியாவில் உள்ள தங்களது வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த அறிக்கையை தயாரித்து தனது கண்டறிதல் முடிவுகளை வெளியிட்டுள்ளது. மோசடி மூலம் திருட முயன்ற பணத்தின் மொத்த மதிப்பு 35% அதிகரித்துள்ள அதே வேளையில், மோசடிக்கான தொலைபேசி அழைப்புகளின் சராசரி நேரம் 31 சதவீதமும், மோசடி நோகத்திற்காக உரையாடும் அமர்வுகளின் சராசரி நேரம் 32 சதவீதமும் குறைந்துள்ளதை இந்தத் தரவுகள் காட்டுகின்றன.
"அதிக மதிப்புள்ள தொகையைக் குறிவைப்பதும், அதேசமயம் மோசடிக்கான நேரத்தைக் குறைத்திருப்பதும் மோசடிக்காரர்கள் தற்போது மிகவும் திறமையாகச் செயல்படுவதையே நமக்கு உணர்த்துகிறது" என்று பீகாக் கூறுகிறார். "குற்றவாளிகள் நன்கு ஒத்திகை பார்க்கப்பட்ட சமூகப் பொறியியல் மற்றும் தானியங்கித் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, பொதுமக்களை நம்பவைத்து, ஏதேனும் சந்தேகம் எழுவதற்கு முன்பாகவே பணத்தை தங்கள் கணக்குகளுக்கு மாற்றிவிட்டு காணாமல் போய்விடுகின்றனர்."
இந்தியாவில் யுபிஐ (UPI), மொபைல் பேங்கிங், இ-காமர்ஸ் மற்றும் ஆன்லைன் முதலீட்டுத் தளங்களின் மாபெரும் வளர்ச்சி, மிகப்பிரம்மாண்டமான டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சூழலை உருவாக்கியுள்ளது. இதுவே நிதி மோசடிக்காரர்களுக்கான கவர்ச்சிகரமான செயல்தளமாகவும் அமைந்துள்ளது. இருப்பினும், மதிப்புள்ள தொகையை குறிவைத்து நடக்கும் மோசடி முயற்சிகள் அதிகரித்திருந்தாலும், பயோகேட்ச் வாடிக்கையாளர்களைக் குறிவைக்கும் மோசடி முயற்சிகளில் 12% சரிவு ஏற்பட்டிருப்பது பதிவாகியுள்ளது.
"வங்கிகள், இந்திய ரிசர்வ் வங்கி (RBI), I4C மற்றும் சட்ட அமலாக்க அமைப்புகளுக்கு இடையே அதிகளவில் வலுவான ஒருங்கிணைப்பும், ஒத்துழைப்பும் காணப்படுவது ஊக்கமளிக்கும் ஒரு நல்ல செய்தியாகும்," என்று பயோகேட்ச் நிறுவனத்தின் உலகளாவிய ஆலோசனை பிரிவின் இயக்குநர் சுபாஷிஷ் போஸ் கூறினார். "பயனர்களின் நடத்தையை அறியும் தொழில்நுட்பமானது, வங்கிகள் வழக்கமான அங்கீகாரமளிப்பு மற்றும் தரவை சரிபார்த்து உறுதி செய்யும் முறைகளைத் தாண்டி, பயனர்களின் நோக்கத்தைத் தொடர்ந்து மதிப்பீடு செய்ய உதவுகிறது. இதன் மூலம் மோசடிகளை முன்கூட்டியே கண்டறியவும் மற்றும் மிக விரைவாக பதில்வினையாற்றவும் இயலும்."
விரிவான தரவுகள் மற்றும் கண்டறிதல் முடிவுகளை அறிய, அதிக காலதாமதம் ஏற்படுவதற்கு முன்பே பண மோசடி செயல்பாடுகளைக் கண்டறிவது குறித்த ஆழமான ஆய்வை உள்ளடக்கிய இணைக்கப்பட்டுள்ள அறிக்கையைப் பார்க்கவும்.
பயோகேட்ச் பற்றி:
டிஜிட்டல் வங்கி தளங்களில் பயனர்கள் செயல்படும்போது 3,000-க்கும் மேற்பட்ட அநாமதேய தரவு புள்ளிகளை (கீஸ்ட்ரோக், மவுஸ் செயல்பாடு, தொடுதிரை பயன்பாடு, ஏஐ ஏஜென்ட்/கருவிகளின் பயன்பாடு போன்றவை) தொடர்ச்சியாக சேகரித்து, மனித நடத்தைகளை உணர்ந்து மோசடிகளையும மற்றும் நிதிக் குற்றங்களையும் பயோகேட்ச் நிறுவனம் தடுக்கிறது. இந்தத் தரவுகளின் மூலம், பயோகேட்ச் நிறுவனத்தின் ஏஐ (செயற்கை நுண்ணறிவு) மாடல்கள் பயனரின் நோக்கம் மற்றும் அவர்களை யாரேனும் வற்புறுத்துகிறார்களா என்பதை ஒவ்வொரு மில்லிசெகண்டிலும் மதிப்பீடு செய்து, மோசடிக்காரர்களையும் உண்மையான பயனர்களையும் நிகழ்நேரத்தில் வேறுபடுத்த வங்கிகளுக்கு உதவுகிறது. 2026 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் (H1) முடிவில், 370-க்கும் அதிகமான நிதி நிறுவனங்கள் பயோகேட்ச் தீர்வுகளைப் பயன்படுத்துகின்றன; இவை மாதத்திற்கு 19 பில்லியன் பயனர் செயல்பாடுகளை ஆய்வு செய்து, உலகளவில் 1.8 பில்லியனுக்கும் அதிகமான சாதனங்களில் இருந்து அணுகப்படும் 760 மில்லியனுக்கும் அதிகமான கணக்குகளை நிதி மோசடிகள் மற்றும் நிதி குற்றங்களிலிருந்து பாதிப்படையாமல் பாதுகாக்கின்றன.