மோட்டார் சைக்கிள், பழைய கார்கள் வாங்க கடன்: உஜ்ஜீவன் ஸ்மால் பைனான்ஸ் வங்கி அறிமுகம்
சென்னை, ஜூலை - 4
உஜ்ஜீவன் ஸ்மால் பைனான்ஸ் வங்கி, மோட்டார் சைக்கிள் மற்றும் பழைய கார்களுக்கு கடன் வழங்கும் தனது வாகனக் கடன் சேவையை சென்னையில் அறிமுகப்படுத்தி உள்ளது.
வங்கியின் பாதுகாப்பான கடன் சேவைகளை வலுப்படுத்தும் அதேவேளையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களின் வாகனக் கனவுகளை நிறைவேற்றும் விதமாக இந்த கடன் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக இவ்வங்கி தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் சொந்த வாகனங்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. மாதச் சம்பளம் பெறுபவர்கள், சுயதொழில் செய்பவர்கள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் செய்பவர்கள் எனப் பல்வேறு தரப்பட்ட வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள சென்னை, தமிழ்நாட்டின் வாகனச் சந்தைகளில் முக்கியமான ஒன்றாகத் திகழ்கிறது. இங்கு இருசக்கர வாகனங்கள் மற்றும் பழைய கார்களுக்கான தேவை அதிக அளவில் உள்ளது.
வாடிக்கையாளர் சேவையை அதிகரிக்கவும், நகரத்தில் உள்ள வாகன விற்பனையாளர்களுடன் நல்லதொரு கூட்டாண்மையை ஏற்படுத்தவும், வேளச்சேரி, அண்ணா நகர், போரூர், தாம்பரம், தி.நகர், பெரம்பூர், முகப்பேர், மயிலாப்பூர் மற்றும் அடையாறு உள்ளிட்ட சென்னையில் உள்ள தனது 9 கிளைகள் மூலம் இந்த கடன் வசதியை வங்கி வழங்க உள்ளது.
குறைந்த விலை வீடுகளுக்கான கடன், MSME கடன், தங்க நகைக் கடன் மற்றும் பிற ரீடைல் பேங்கிங் தயாரிப்புகளுடன் சேர்த்து, உஜ்ஜீவன் வங்கியின் பாதுகாப்பான கடன் வழங்கும் சேவைகளை இந்த வாகனக் கடன் சேவை மேலும் முழுமையடையச் செய்கிறது.
இந்த அறிமுகம் குறித்து உஜ்ஜீவன் ஸ்மால் பைனான்ஸ் வங்கியின் வாகனக் கடன் பிரிவின் வணிகத் தலைவர் பிரேம்குமார் கூறுகையில்:
"வாகனங்களுக்கான சிறப்பான சந்தை மற்றும் சொந்த வாகனங்களுக்கான தேவை அதிகரித்துள்ள சென்னை, எங்களது வாகனக் கடன் வணிகத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க வாய்ப்பை வழங்குகிறது. வலுவான கிளை நெட்வொர்க் மற்றும் டீலர் கூட்டாண்மையுடன், சென்னையில் இருசக்கர வாகனம் அல்லது பழைய கார் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு எளிதான, வெளிப்படையான மற்றும் அவர்களது தேவைக்கேற்ற கடன்களை விரிவுபடுத்த எங்கள் வங்கி தயாராக உள்ளது. இதன் மூலம், நெகிழ்வான திருப்பிச் செலுத்தும் விருப்பங்கள் மற்றும் எளிமையான ஆவண நடைமுறைகளுடன் வாகன உரிமையை மேலும் எளிதில் பெறக்கூடியதாகவும் தடையற்றதாகவும் மாற்றுவதே எங்களின் முக்கிய நோக்கமாகும். அதிக வளர்ச்சி கொண்ட சந்தைகளில் எங்கள் பாதுகாப்பான ரீடைல் கடன் சேவைகளை வலுப்படுத்தும் எங்கள் திட்டத்தின் மற்றொரு வளர்ச்சியாக இந்த அறிமுகம் அமைந்துள்ளது," என்றார்.
நல்லதொரு நிதி அமைப்பை உருவாக்குவதற்காக, சென்னையில் உள்ள முன்னணி வாகன விற்பனையாளர்களுடன் இவ்வங்கி கைகோர்க்க உள்ளது. அதே நேரத்தில், வாகன உற்பத்தி நிறுவனங்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப திறமையான மற்றும் வெளிப்படையான வாடிக்கையாளர் அனுபவத்தையும் வழங்கும்.
தென் மண்டலத்தின் மொத்த வாகனக் கடன் வினியோகத்தில் சுமார் 30 சதவீதம் தமிழ்நாட்டை சேர்ந்த வாடிக்கையாளர்களால் பெறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக, இருசக்கர வாகனம் மற்றும் பழைய வாகன விற்பனையாளர்கள் உட்பட 50-க்கும் மேற்பட்ட டீலர்களை சென்னையில் இணைக்க வங்கி திட்டமிட்டுள்ளது.
