ஸ்ரீலீலா - கேள்வி & பதில்
1. உங்களுடைய ஒரு முழுமையான விடுமுறை நாள் காலையில் இருந்து இரவு வரை எப்படி இருக்கும்?
உண்மையைச் சொன்னால், எந்தப் பதற்றமும் இல்லாமல் நிதானமாக இருக்க வேண்டும். மெதுவான காலைப்பொழுது, அலாரம் சத்தம் இல்லாத விழிப்பு, இயல்பான சூரிய வெளிச்சம் மற்றும் அமைதி. எனக்கு காபி குடிப்பது மிகவும் பிடிக்கும். வழக்கமாக நான் எப்போதும் அவசரமாக ஓடிக்கொண்டே இருப்பதால், விடுமுறை நாளில் காபியின் ஒவ்வொரு மிடக்கையும் இரசித்து குடிக்க விரும்புவேன். எந்த ஒரு திட்டமிடலும் இல்லாமல் இயல்பாக நகரும் நாளே ஒரு முழுமையான நாள் என்று நான் நினைக்கிறேன். கொஞ்சம் நேரம் வெளியில் இயற்கையோடு செலவிடுவது, நல்ல உணவை இரசித்து உண்பது, சிறிய தருணங்களையும் இரசிப்பது, நாள் முடியும்போது அவசரமே இல்லாமல் அமைதியாக உணர்வது... இதுதான் என் முழுமையான நாள்!
2. நீங்கள் நீங்களாகவே உணரும் ஒரு இடம் எது? ஏன்?
படப்பிடிப்புத் தளங்களைத் தவிர்த்துப் பார்த்தால், என்னுடைய சொந்த அறைதான். அந்த ஒரு இடத்தில் மட்டும்தான் எல்லாமே என்னை பிரதிபலிக்கும் வகையில் இருக்கும், நான் எதற்காகவும் எதற்கும் என்னை மாற்றிக்கொள்ள வேண்டியதில்லை. அது மிகவும் தனிப்பட்டதாக, பரிச்சயமானதாக, முழுமையாக என்னுடையதாக உணர்வைத் தரும்.
3. எத்தகை இடங்கள் உங்களுக்கு அதிக உத்வேகத்தை அளிக்கின்றன?
எளிமையானது — அதாவது சுத்தமான, தாராளமான இடவசதி கொண்ட, மென்மையான வெளிச்சம் உள்ள இடங்கள். அதோடு, எனக்கு பயணம் செய்யும்போது சிறிய பொருட்களை சேகரிப்பது மிகவும் பிடிக்கும். அதனால் நான் செல்லும் ஒவ்வொரு இடத்திலிருந்தும் அர்த்தமுள்ள ஏதாவது ஒரு பொருளை வாங்கி வர முயற்சிப்பேன். அந்தச் சிறிய விஷயங்கள், ஒரு இடத்தை எனக்கு மிகவும் நெருக்கமானதாகவும் தனிப்பட்டதாகவும் மாற்றுகின்றன.
4. எத்தகைய இடங்களுடன் நீங்கள் இயல்பாகவே உங்களை இணைத்துக் கொள்கிறீர்கள்? அவை உங்களுக்கு நெருக்கமானதாக மாற என்ன காரணம்?
அமைதியான, சமநிலையான, மனதிற்கு இதமளிக்கும் இடங்களால் நான் ஈர்க்கப்படுகிறேன். என்னைப் பொறுத்தவரை, ஒரு இடம் பார்க்க எப்படி இருக்கிறதோ, அதுதான் நம் மனநிலையைத் தீர்மானிக்கிறது. அதனால்தான் எனக்கு வெளிர் நிறங்கள், மென்மையான நிறங்கள், கிரீம் நிறம், செடிகள் மூலமாக ஆங்காங்கே சேர்க்கப்படும் பச்சை நிறம் ஆகியவை மிகவும் பிடிக்கும். எனக்கு அதிக பொருட்கள் நிறைந்த இடங்களோ அல்லது ஒன்றுமே இல்லாமல் வெறிச்சோடி இருக்கும் இடங்களோ பிடிக்காது. நறுமண மெழுகுவர்த்திகள், அழகான விளக்குகள் போன்ற எளிய விஷயங்கள் ஒரு இடத்திற்கு மிக நுட்பமான முறையில் ஒரு கதகதப்பையும், தனித்துவத்தையும் தருவதால் அவற்றை நான் மிகவும் இரசிப்பேன்.
5. 'மேன் பி' (நானும் கூட) என்று உங்களைச் சொல்ல வைக்கும், நீங்கள் ஆழமாக நம்பும் ஒரு விஷயம் எது?
சிறிய மாற்றங்கள் கூட எல்லாவற்றிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் உண்மையாகவே நம்புகிறேன். ஒரு இடத்தில் நாம் செய்யும் மிகச்சிறிய மாற்றம் கூட, நம்முடைய மனநிலை மற்றும் எண்ண ஓட்டத்தில் ஒரு பெரிய தாக்கத்தை உண்டாக்கும். என் சுற்றியுள்ள இடங்களில் அவ்வப்போது சிறிய மாற்றங்களைச் செய்வதை நான் இரசிப்பேன்; ஏனென்றால், அது எல்லாவற்றையும் மீண்டும் புதியதாகவும் புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க உதவுகிறது.
6. உங்களுக்குப் பிடித்த நிறத்தோடு உங்களை இணைக்கும் ஏதேனும் ஒரு நினைவு உங்களிடம் இருக்கிறதா?
இது ஒரு குறிப்பிட்ட நினைவை விட, ஒரு குறிப்பிட்ட உணர்வோடு தொடர்புடையது என்றுதான் நான் நினைக்கிறேன். சில நிறங்கள் எனக்கு அமைதி, கதகதப்பு அத்துடன் நான் முற்றிலும் நிம்மதியாக உணரும் இடங்களை நினைவூட்டுகின்றன. அந்த உணர்வுப்பூர்வமான பிணைப்புதான் என்னை அந்த நிறங்களை நோக்கி ஈர்க்கிறது.
7. நீங்கள் மிகவும் ஆக்கப்பூர்வமாக உணரும் ஒரு இடம் எது?
இயற்கை வெளிச்சம் நிறைந்த, கவனச்சிதறல்கள் இல்லாத, மற்றும் தாராளமான இடவசதி கொண்ட ஒரு இடம்தான் அது. அத்தகைய சூழல் நம் எண்ணங்களை எவ்வித தடையும் இன்றி சுதந்திரமாக பாய அனுமதிக்கும் என்று நான் நினைக்கிறேன், அதை நான் மிகவும் இரசிக்கிறேன்.

