மத்திய அரசின் பிஎம் சூர்யா கர் முஃப்ட் பிஜிலி யோஜனா (PMSGMBY) திட்டத்தின் கீழ், ஆயிரக்கணக்கான பயனாளிகளுக்கு மானியம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக அனுப்பப்பட்டு வந்த இந்த நிதி, தற்போது முழுமையாக வரவு வைக்கப்பட்டுள்ளது.
மத்திய நிதி அமைச்சகத்தின் தகவல்படி, PMSGMBY திட்டம் சூரிய ஆற்றலை மலிவான விலையில் வீடுகளுக்கு கொண்டு சேர்ப்பதில் சிறப்பான முன்னேற்றம் கண்டுள்ளது. 2025 செப்டம்பர் நிலவரப்படி, பொதுத்துறை வங்கிகள் (PSB) 5.79 லட்சத்திற்கும் அதிகமான கடன் விண்ணப்பங்களை ஒப்புதல் அளித்துள்ளன. இதன் மொத்த மதிப்பு சுமார் ₹10,907 கோடி ஆகும்.
இந்த நிதி திட்டம், கூரை மேல் சூரிய மின்சக்தி அமைப்புகளை நிறுவுவதற்கான கடன்களை வழங்குகிறது. திட்டத்திற்கான கடன்கள், ஜனசமர்த் போர்ட்டல் வழியாக நிர்வகிக்கப்படுகின்றன.
இந்த கடன் திட்டம் பல குறிப்பிடத்தக்க பலன்களை வழங்குகிறது. ₹2 லட்சம் வரையிலான கடன்கள், குறைந்த வட்டி விகிதத்தில், பிணையம் இல்லாமல் வழங்கப்படுகின்றன. மின்சார செலவு சேமிப்புக்கு ஏற்றவாறு நீண்ட கால திருப்பி செலுத்தும் சலுகையும், கடன் விநியோகத்தில் இருந்து 6 மாத சலுகைக் காலமும் இதில் அடங்கும்.
இதேபோன்ற திட்டத்தை தமிழக அரசும் செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சூரிய மின்சக்தி பேனல்களை நிறுவ விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கூரை மேல் சூரிய மின்சக்தி பேனல்கள் அமைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன. வீட்டிற்குத் தேவையான சூரிய கூரை திறனைக் கணக்கிடுவதற்கான செயலியை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் மின்சார கட்டணம் இல்லாமல் வீட்டுத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும்.
கூரை மேல் சூரிய மின்சக்தி அமைப்புகள் மூலம் மின்சாரம் பெறுபவர்களுக்கு வழங்கப்படும் மானியம் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி, 1 kW க்கு ₹30,000, 2 kW க்கு ₹60,000, மற்றும் 3 kW க்கு ₹78,000 வரை மானியம் வழங்கப்படும்.
பூமியை பசுமையாக வைத்திருக்க உதவுங்கள் என்றும், இணையதளத்தில் முதலில் பதிவு செய்து விண்ணப்பிக்குமாறும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்திட்டம், வீட்டில் உள்ள தனியார் அல்லது அரசு உதவியுடன் கூரை மேல் சோலார் அமைப்பதை ஊக்குவிக்கிறது.
பொதுவாக, கூரை மேல் சோலார் அமைப்பதற்கு சதுர அடியைப் பொறுத்து ₹50,000 முதல் ₹2-3 லட்சம் வரை செலவாகும். இந்த அமைப்புகள் பெரும்பாலும் வீட்டின் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்கின்றன. மழைக்காலம் அல்லது பனிக்காலத்தில் ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் மட்டுமே மின்சார வாரியத்தின் சப்ளை தேவைப்படும்.
கூரை மேல் சோலார் அமைத்திருப்பதை அரசிடம் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு செய்தால், அந்த குறைந்தபட்ச மின்சாரத் தேவையை அரசே ஏற்றுக்கொள்ளும் திட்டமாகும் இது. பொதுவாக, கூரை மேல் சோலார் இருந்தால், மாதம் 100 யூனிட் மின்சாரம் கூட தேவைப்படாது, ஆனால் 300 யூனிட் வரை இலவசமாகப் பயன்படுத்த முடியும்.
கூரை மேல் சோலார் அமைப்பதை ஊக்குவிக்கும் விதமாகவே இந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
.jpeg)