Tuesday, November 4, 2025

கவனம் செலுத்தினால் மூளை 'ஸ்மார்ட்' ஆகிறது: ஹீப்ரு பல்கலை. விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

கவனம் செலுத்தினால் மூளை 'ஸ்மார்ட்' ஆகிறது: ஹீப்ரு பல்கலை. விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!

ஹீப்ரு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில், ஒரு வேலையில் கவனம் செலுத்தும்போது, மூளையின் ஒலி செயலாக்க மையமான செவிப்புலன் புறணி வெறும் ஒலிகளுக்கு எதிர்வினையாற்றுவதை விட்டுவிட்டு, வேலையின் தாளத்திற்கு ஏற்பச் செயல்படுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.


நீங்க ஒரு முக்கியமான வேலையில் மும்முரமாக இருக்கும்போது, உங்களைச் சுற்றியுள்ள சத்தம் திடீரென்று மறைந்து, நீங்க கேட்க வேண்டிய ஒலி மட்டும் துல்லியமாகத் தெரிவதை உணர்ந்திருக்கிறீர்களா? இது வெறும் கவனம் மட்டுமல்ல, மூளையின் உள்ளே நடக்கும் சூப்பர் ஸ்மாட் ட்ரிக் ஆகும். ஜெருசலேமின் ஹீப்ரு பல்கலைக்கழக விஞ்ஞானிகள், நாம் ஒரு வேலையில் தீவிரமாக ஈடுபடும்போது, நமது மூளையின் ஒலி மையமான செவிப்புலன் புறணி (Auditory Cortex) செயல்படும் விதமே மாறுகிறது என்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.


இதுவரை, நாம் கவனம் செலுத்தும்போது, மூளை முக்கியமான ஒலிகளின் அளவை (Volume) உயர்த்திவிடுகிறது என்றுதான் நினைத்தோம். ஆனால், பேராசிரயர் இஸ்ரேல் நெல்கன் தலைமையிலான ஆய்வு குழு ஒரு புதிய உண்மையை வெளிப்படுத்தியுள்ளது. நாம் ஒரு வேலையைச் செய்யும்போது, செவிப்புலன் புறணியில் உள்ள நரம்பணுக்கள், வெளியில் வரும் சத்தத்தைக் கேட்டுக் குதிப்பதற்குப் பதிலாக, நாம் செய்யும் வேலையின் வேகத்துக்கும், தாளத்துக்கும் (Rhythm of the task) ஏற்பத் துடிக்கின்றன. மூளை வெறும் சத்தத்திற்கு எதிர்வினையாற்றுவதில்லை. அது, அடுத்த சத்தம் எப்போது வரும் என்று முன்னறிவித்துத் தயாராகிறது. இது, மியூசிக் பேண்டில் தாளத்துக்கு ஏற்ப ஒவ்வொரு கருவியும் வாசிக்கப்படுவதைப் போன்றது.


கவனம் செலுத்தும்போது, செவிப்புலன் புறணி ஒலிகளின் பதில்களை உயர்த்துவதில்லை. மாறாக, அது தனது நரம்பணு செயல்பாட்டின் நேரத்தை மறுசீரமைத்து, வேலையுடன் தொடர்புடைய ஒலிகளை மிகவும் திறமையாகக் கேட்கிறது. விஞ்ஞானிகளின் கணினி மாதிரிகளின்படி, இந்தக் காலத்தைக் கணக்கிடும் செயல்பாடு, நம் கவனத்திற்குத் தேவையில்லாத நரம்பியல் இணைப்புகளைத் தற்காலிகமாக பலவீனப்படுத்துகிறது.


இதன் மூலம், கவனம் என்பது வெறும் சத்தத்தை அதிகரிக்கும் 'வால்யூம் நாப்' (Volume Knob) போலச் செயல்படாமல், தேவையில்லாத இரைச்சலை துல்லியமாக வடிகட்டி, தேவையான ஒலியை மட்டும் கேட்கச் செய்யும் ஒரு 'அடாப்டிவ் ஃபில்டர்' (Adaptive Filter) போலச் செயல்படுகிறது.


இந்தக் கண்டுபிடிப்பு நேரடியாகப் பல தொழில்நுட்பங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். இரைச்சலான இடங்களில் பேச்சுகளைத் தெளிவாகப் பிரித்து அளிக்கும் மிகவும் மேம்பட்ட கருவிகளை உருவாக்கலாம். கவனச் சிதறலைச் சமாளிக்கும் பயிற்சிகளை இந்த மூளையின் நேர உத்தி பயன்படுத்தி வடிவமைக்கலாம். ஒருவர் எப்போது கவனம் செலுத்துகிறார் என்பதைக் கண்டறியும் தொழில்நுட்பங்களை மேம்படுத்தலாம். இந்த ஆய்வு, நாம் எப்படிச் சிக்கலான ஒலியுலகத்தைப் புரிந்துகொள்கிறோம் என்பதற்கான புதிய கதவுகளைத் திறந்துவிட்டுள்ளது.