Layoffs: அமேசான், டிசிஎஸ், மைக்ரோசா்ட் நிறுவனங்களில் இந்த ஆண்டு மட்டும் 1.12 லட்சம் பேர் பணிநீக்கம்!
டெல்லி: அமேசான், இன்டெல், டிசிஎஸ், அச்சென்சர், மைக்ரோசா்ட் உள்ளிட்ட ஐடி நிறுவனங்களில் இந்த ஆண்டு மட்டும் 1,12,000 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த பணிநீக்கங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
உலகம் முழுவதும் உள்ள பிரபலமான ஐடி நிறுவனங்களில் இந்த ஆண்டு பெரிய அளவில் பணி நீக்கங்கள் செய்யப்பட்டுள்ளன. ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், பொருளாதார மந்த நிலை உள்ளிட்ட காரணிகளால் இந்த பணிநீக்கங்கள் நடத்தப்பட்டுள்ளன.
முன்னணி ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், மைக்ரோசா்ட், அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களில் இந்த ஆண்டு மட்டும் 1.12 லட்சம் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இணையதளத்தில்படி 218 நிறுவனங்கள் இந்த ஆண்டு இதுவரை 1,12,000 பேரை பணியிலிருந்து அதிரடியாக நீக்கிவிட்டன. இது ஐடி மோகத்தில் கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட படிப்புகளை படிக்கும் கல்லூரி மாணவர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்டெல், மைக்ரோசா்ட், அமேசான் ஆகிய நிறுவனங்கள் அதிக ஊழியர்களை நீக்கியுள்ளன. அதிலும் இன்டலில் 24 ஆயிரம் பேர் வேலையிழந்துள்ளனர். கணினி சிப்களை உருவாக்கும் இன்டெல் நிறுவனம் உலகளவில் 22 சதவீதம் பேர், அதாவது 24 ஆயிரம் பேரை பணியிலிருந்து நீக்கியுள்ளது. அதிலும் அமெரிக்கா, ஜெர்மனி, காஸ்டா ரிக்கா, போலாந்து உள்ளிட்ட இடங்களில் பணிநீக்கம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களில் மனிதர்கள் செய்யும் பணிகளை ஏஐ தொழில்நுட்பம் குறித்த நேரத்தை காட்டிலும் முன்கூட்டியே முடித்துவிடுகிறது. இதனால் பலர் வேலையிழக்க நேரிட்டுள்ளது.
டிசிஎஸ் எனும் இந்தியாவின் மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனத்தில் செப்டம்பர் மாதம் வரை 19,755 பேர் வேலைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை இல்லாத அளவுக்கு இது பெரிய அளவிலான பணிநீக்கமாகும். இதனால் டிசிஎஸ்ஸில் பணியாற்றும் நபர்களின் எண்ணிக்கை 6 லட்சத்திற்கு குறைந்துள்ளது.
உலகின் இ-காமர்ஸ் எனப்படும் ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசானில் 14 ஆயிரம் பேர் பணிநீக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டுக்குள் மொத்தம் 30 ஆயிரம் பேர் பணிநீக்கப்படுவார்கள் என சொல்லப்படுகிறது.
மைக்ரோசா்ட் என்ற நிறுவனத்தில் இந்த ஆண்டு 9 ஆயிரம் பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். உலகில் பணியாற்றும் ஊழியர்களில் இது 4 சதவீதம் ஆகும். ஏஐ தொழில்நுட்பத்தில் முதலீடு செய்ய வேண்டிய தேவை இந்த நிறுவனத்திற்கு இருப்பதால் பணிநீக்கத்தை கையில் எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
யுபிஎஸ் எனும் நிறுவனத்தில் இந்த ஆண்டு இதுவரை 48 ஆயிரம் பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் உள்ள 93 யூனிட்டுகளை அந்த நிறுவனம் மூடிவிட்டது. அது போல் அச்சென்சரில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரும் ஃபோர்டில் 13 ஆயிரத்திற்கு மேற்பட்டோரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். Electric Vehicles மீது கவனம் செலுத்த ஃபோர்டு முடிவு செய்துள்ளதால் இந்த பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
மேற்கண்ட நிறுவனங்களின் தலைமை பொறுப்புகள், நடுத்தர தலைமை பொறுப்புகளில் இருப்பவர்கள் அதிகளவு வேலையிழப்பை சந்தித்து வருகிறார்கள். பணியாளர்களுக்கான செலவை குறைத்து ஏஐ தொழில்நுட்பம், கிளவுட் கம்யூட்டிங் உள்ளிட்டவற்றில் கூடுதல் முதலீடு செய்து வருகின்றன.