ஒரு கப் காபி ரூ.700க்கு விற்றால்.. தியேட்டர்கள் நிச்சயம் காலியாகிவிடும்!" உச்ச நீதிமன்றம் அதிருப்தி
டெல்லி: தியேட்டரில் சினிமா டிக்கெட் விலையை விட ஸ்நாக்ஸ் ரேட் அதிகமாக இருப்பதாகச் சொல்லி மக்கள் புலம்புவதை நாம் பார்த்திருப்போம். இதற்கிடையே இந்த விவகாரத்தில் இப்போது உச்ச நீதிமன்றமே நேரடியாகத் தலையிட்டுள்ளது. இவ்வளவு ரேட்டில் ஸ்நாக்ஸ் விற்றால் தியேட்டர்களே காலியாகிவிடும் என்றும் மக்கள் வரவே மாட்டார்கள் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
சினிமா தியேட்டர்களில் டிக்கெட் ரேட்டை விட ஸ்நாக்ஸ் ரேட் தான எப்போதும் உச்சத்தில் இருக்கும். ஒரு சிறிய பாப்கார்ன் ரூ.500, குளிர்பானங்கள் ரூ.400.. அவ்வளவு ஏன் ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் கூட ரூ. 100க்கு விற்கப்படும். இது நீண்ட நாட்களாகவே பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.
இதற்கிடையே இப்போது உச்ச நீதிமன்றமே இதில் நேரடியாகத் தலையிட்டுள்ளது. சினிமா தியேட்டர்களில் அதிக விலைக்கு ஸ்நாக்ஸ் விற்கப்படுவது குறித்து கடுமையாக எச்சரித்துள்ளது. கர்நாடகாவில் தியேட்டர்களுக்கு அதிகபட்ச விலையை நிர்ணயம் செய்வது தொடர்பாக அம்மாநில அரசு பிறப்பித்த உத்தரவு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளான விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்தக் கருத்துகளைத் தெரிவித்தது.
கர்நாடக அரசு அங்குள்ள தியேட்டர்களில் அதிகபட்சம் ரூ.200 மட்டுமே டிக்கெட் கட்டணமாக வசூலிக்க வேண்டும் என உத்தரவிட்டது. கர்நாடக அரசின் நடவடிக்கைக்குத் தடை கோரி தியேட்டர் உரிமையாளர்கள் முதலில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். உச்சவரம்பு தொடர்பான கர்நாடக அரசின் உத்தரவுக்கு அம்மாநில ஐகோர்ட் இடைக்காலத் தடை விதித்திருந்தது. இருப்பினும், வேறு சில கட்டுப்பாடுகளை விதித்தது.
இது தொடர்பான வழக்கு விசாரணையிலேயே நீதிபதி விக்ரம் நாத், "தண்ணீர் பாட்டிலுக்கு ரூ. 100, காபிக்கு ரூ. 700 வசூலிக்கிறீர்கள்" என்று தெரிவித்தார். மேலும், இந்தளவுக்கு அநியாயமான விலைக்கு ஸ்நாக்ஸ்களை விற்றால் அது மக்களைத் தியேட்டர்களில் இருந்தே விரட்டிவிடும் என்று நீதிபதிகள் கவலை தெரிவித்தனர். மேலும், மாநில அரசின் நடவடிக்கைகள் நுகர்வோரைப் பாதுகாக்கும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
அதற்கு இந்திய மல்டிபிளக்ஸ் சங்கம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, "தாஜ் ஹோட்டல் காபிக்கு ரூ. 1,000 வசூலிக்கிறார்கள்; அதை நீங்கள் கட்டுப்படுத்த முடியுமா? இது விருப்பம் சார்ந்தது" என்று வாதிட்டார். ஆனால் இதை ஏற்க மறுத்த நீதிபதி விக்ரம் நாத், "இந்த கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட வேண்டும். ஏற்கனவே, சினிமா குறைந்து வருகிறது. மக்கள் தியேட்டருக்கு வந்து ரசிப்பதற்கு அதை இன்னும் நியாயமானதாக மாற்ற வேண்டும்.. இல்லையெனில் திரையரங்குகள் காலியாகிவிடும்" என்று பதிலளித்தார்.
அதற்கு ரோஹத்கி, "அது காலியாக இருக்கட்டுமே.. இது மல்டிபிளக்ஸுகளுக்கு மட்டுமே. நீங்கள் சாதாரணத் தியேட்டர்களுக்கு செல்லலாம். நீங்கள் ஏன் இங்கு மட்டுமே வர விரும்புகிறீர்கள்?" என்றார். இருப்பினும் நீதிபதி விக்ராம் நாத், "இப்போது சாதாரணத் தியேட்டர்கள் பெரும்பாலும் இருப்பதில்லை.. நாங்கள் அரசு சொல்வதே சரி என நினைக்கிறோம். உச்சவரம்பு இருக்க வேண்டும்" என்றார்.
மூத்த வழக்கறிஞர் ரோஹத்கி நீதிமன்றத்தில் மேலும், "கவுன்டர்களில் வந்து பணம் கொடுத்து டிக்கெட் வாங்குவோரின் விவரங்களைச் சேகரிக்க வேண்டும் என ஐகோர்ட் சொல்லியுள்ளது.. அதைச் செயல்படுத்துவது கடினம்..! மேலும், டிக்கெட்டுகள் இன்னும் கவுண்டர்கள் மூலம் விற்கப்படுகின்றன என்று நீதிபதிகள் நினைக்கிறார்கள். ஆனால், டிக்கெட்டுகள் இப்போது புக் மை ஷோ வழியாக விற்கப்படுகின்றன. அவர்களிடம் விவரங்கள் இருக்கும். வெகு சிலர் மட்டுமே கவுன்டர்களில் டிக்கெட் வாங்குகிறார்கள். அவர்கள் எப்படி அடையாள அட்டை கொண்டு செல்கிறார்கள்?" என்றார்.
அப்போது கர்நாடகா அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "நுகர்வோர் பாதுகாப்பிற்காகவே அடையாள ஐடிக்களை வாங்கச் சொல்கிறோம். இந்த வழக்கில் ஒருவேளை மாநில அரசு வென்றால்.. இன்று ரூ.1,000 கொடுத்து டிக்கெட் வாங்கும் ஒருவருக்கு ரூ.800 திரும்பக் கிடைக்கும்" என்று அவர் விளக்கினார்.