Thursday, November 13, 2025

தொடரும் விலை உயர்வால் பணி ஆணைகள் இல்லை: 10 ஆயிரம் பொற்கொல்லர்கள் ஊர் திரும்பினர்

தொடரும் விலை உயர்வால் பணி ஆணைகள் இல்லை: 10 ஆயிரம் பொற்கொல்லர்கள் ஊர் திரும்பினர்

கோவை: தங்கம் விலை வரலாறு காணாத வகையில் தொடர்ந்து உயர்ந்து வருவதால் போதுமான பணி ஆணைகள் இல்லை. இதனால் பிற மாவட்டங்களை சேர்ந்த 10 ஆயிரம் பொற்கொல்லர்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றுவிட்டதாக கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.


தொழில் நகரான கோவை தங்க நகை தயாரிப்பிலும் தேசிய அளவில் புகழ் பெற்றுள்ளது. ஒரு லட்சம் பேர் இத்தொழிலில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருவதால் நகைகளுக்கான பணி ஆணைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தங்க நகை தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.


இதுகுறித்து கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் முத்து வெங்கட்ராம் கூறியதாவது: கோவையில் 40 ஆயிரம் பொற்கொல்லர்கள் உட்பட சுமார் ஒரு லட்சம் பேர் தங்க நகை தயாரிப்பு தொழிலில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். கரோனா தொற்றுப் பரவலுக்கு முன் தினமும் சராசரியாக 200 கிலோ அளவுக்கு தங்க நகை வணிகம் கோவையில் நடைபெற்று வந்தது.


2020-ம் ஆண்டுக்கு பின் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மத்திய அரசு தங்கம் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரியை 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைத்துள்ளது. ஜிஎஸ்டி வரி 3 சதவீதம் விதிக்கப்படுகிறது. உலக சந்தை நிலவரத்துக்கு ஏற்ப தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. தொடரும் விலை உயர்வால் தங்க நகை தயாரிப்புத் தொழில் முற்றிலும் முடங்கியுள்ளது.


திருமணம் உள்ளிட்ட பல்வறு சுப நிகழ்வுகளுக்காக தங்க நகைகளை வாங்குபவர்களால், சில நாட்களில் மட்டும் ஓரளவு வியாபாரம் நடக்கிறது. மற்ற நாட்களில் வியாபாரம் முற்றிலும் முடங்கியுள்ளது. நகைகளுக்கு போதுமான பணி ஆணைகள் கிடைக்காததால் பொற்கொல்லர்கள் பலர் தங்களின் சொந்த ஊர்களுக்குச் சென்று விட்டனர். கோவையில் மொத்தம் 40 ஆயிரம் பொற்கொல்லர்கள் உள்ளனர். தற்போது நிலவும் நெருக்கடியான சூழல் காரணமாக 10 ஆயிரம் பேர் தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டனர்.