Thursday, July 3, 2025

எஸ்ஓஜி கிராண்ட்மாஸ்டர்ஸ் தொடர் சென்னையில் வெற்றிகரமாக நிறைவடைந்தது

எஸ்ஓஜி கிராண்ட்மாஸ்டர்ஸ் தொடர் சென்னையில் வெற்றிகரமாக நிறைவடைந்தது

 

முன்னாள் கிரிக்கெட் கேப்டன் ஸ்ரீகாந்த், கிராண்ட்மாஸ்டர் ஹம்பி மற்றும் பி. வில்சன், எம்.பி. விழாவில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

சென்னை, ஜூலை 3, 2025 —

ஸ்கில் ஹப் ஆன்லைன் கேமிங் கூட்டமைப்பின் கிராண்ட்மாஸ்டர்ஸ் தொடர் சாம்பியன்ஷிப் தெற்கு மண்டல தொடர் 2, புதன்கிழமை சென்னையில் வெற்றிகரமாக நிறைவடைந்தது. சென்னை, புதுச்சேரி மற்றும் அந்தமான் & நிக்கோபார் தீவுகள் முழுவதிலும் இருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் இதில் கலந்து கொண்டனர். சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற இந்த மன விளையாட்டு நிகழ்வில், சதுரங்கம் மற்றும் ரம்மி போட்டிகளில் இந்தியாவின் சிறந்த திறமையாளர்கள் தங்கள் திறமைகளை காட்சிப்படுத்தினர். இந்நிகழ்வு, நாட்டில் மன விளையாட்டுகளுக்கான தேசிய அளவிலான ஆர்வம் வளர்ந்து வரும் என்பதை உறுதிப்படுத்தியது. சாம்பியன்ஷிப்பின் நிறைவு விழாவில் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், உலக விரைவு சதுரங்க சாம்பியன் கோனேரு ஹம்பி மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் பி. வில்சன் ஆகியோர் சிறப்புரையாற்றி, இளைஞர்கள் அறிவாற்றலையும் மூலோபாய திறனையும் பயன்படுத்தி விளையாட்டுகளில் ஈடுபடுவதை பாராட்டினர்.

இந்திய சதுரங்க மாஸ்டர்ஸ் பிரிவில், ஆண்கள் பிரிவில் சேதுராமன் எஸ்.பி தங்கப் பதக்கத்தை வென்றார். அவரைப் தொடர்ந்து அர்னவ் மகேஸ்வரி வெள்ளிப் பதக்கமும், பிரதீப் குமார் ஆர்.ஏ வெண்கலப் பதக்கமும் பெற்றனர். பெண்கள் பிரிவில், கீர்த்தி ஸ்ரீ ரெட்டி தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார், கனிஷ்கா எஸ் வெள்ளிப் பதக்கமும் பிரதிக்ஷா பி.எஸ் வெண்கலப் பதக்கமும் வென்றனர். இந்திய ரம்மி கிராண்ட்மாஸ்டர்ஸ் – தெற்கு மண்டலம் 2 போட்டியில், யுவராஜ் ஆர். சாம்பியனாக தேர்வாகினார். மகேஷ் முத்துவேல் இரண்டாவது இடத்தையும், முருகேசன் கண்ணதாசன் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். நான்காவது முதல் ஆறாவது இடங்களை முறையே கருப்பையா கலியபெருமாள், கொலஞ்சிநாதன் ராஜா மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் பெற்றனர்.

நிகழ்வில் உரையாற்றிய முன்னாள் இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் ஸ்ரீகாந்த், இன்றைய டிஜிட்டல் மற்றும் கடுமையான போட்டி சூழலில் மன விளையாட்டுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். "உண்மையான போர் பெரும்பாலும் மனதில்தான் நடைபெறுகிறது என்பதை கிரிக்கெட் எனக்குக் கற்றுத் தந்தது. மனக் கூர்மை, கவனம் மற்றும் மீள்தன்மை ஆகியவை மைதானத்திற்கு வெளியேயும் வாழ்க்கையின் பல்வேறு பரிமாணங்களில் மிக முக்கியம்," என்று அவர் தெரிவித்தார்.


சதுரங்க கிராண்ட்மாஸ்டர் கோனேரு ஹம்பி, இந்திய இளைஞர்களிடையே சதுரங்கத்தின் வளர்ந்து வரும் ஆர்வத்தை புகழ்ந்தார். "தீவிர திறமை மற்றும் அர்ப்பணிப்புடன் கூடிய பல இளம் வீரர்களைக் காண்பது மிகவும் ஊக்கமளிக்கிறது. இவ்வாறான உற்சாக அலை, சதுரங்கத்தை நமது தேசிய அடையாளத்தின் ஓர் அங்கமாக மாற்றும் வழியை உருவாக்குகிறது," என்றார் அவர்.

நிகழ்வின் சிறப்பை கூட்டியது போல், ஸ்கில் ஆன்லைன் கேமிங் கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் மற்றும் பல பிரமுகர்களும் இதில் கலந்துகொண்டனர். இதில், ஸ்கில் ஆன்லைன் கேமிங் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் ஆலோசகர் வழக்கறிஞர் நந்தன் ஜா, துணைத் தலைவர் திரு. அசோக் தியான்சந்த், தலைவர் திரு. சங்கர் அகர்வால், போட்டி இயக்குநரும் இணைச் செயலாளருமான திரு. கௌரவ் தியான்சந்த் மற்றும் நாடு முழுவதும் இருந்து வந்துள்ள பல்வேறு முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

“ஸ்கில் ஆன்லைன் கேமிங் கூட்டமைப்பில், சதுரங்கம் போன்ற திறன் சார்ந்த மன விளையாட்டுகள், கூர்மையான சிந்தனையையும் கட்டுப்பாடான மனப்பாங்கையும் உருவாக்குவதுடன், உலகளாவிய கேமிங் புரட்சியில் முன்னணியில் நிற்கும் ஒருங்கிணைந்த, உற்சாகமிக்க மற்றும் போட்டி உணர்வுள்ள சமூகத்தையும் கட்டியெழுப்புகின்றன என்று நாங்கள் நம்புகிறோம். பின்னணி அல்லது பொருளாதார நிலையைப் பொருட்படுத்தாமல், ஒவ்வொரு திறமையான வீரருக்கும் உலக அரங்கில் சிறந்து விளங்கவும், இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தவும் சம வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்பதே எங்களுடைய அடிப்படை நோக்கம்,” என ஸ்கில் ஆன்லைன் கேமிங் கூட்டமைப்பின் தலைவர் திரு. ஷங்கர் அகர்வால் தெரிவித்தார்.

ஸ்கில் ஆன்லைன் கேமிங் கிராண்ட்மாஸ்டர்ஸ் தென் மண்டல தொடர் 2 இன் வெற்றி, இந்தியாவின் மன விளையாட்டு மற்றும் திறன் சார்ந்த கேமிங் துறையின் வேகமான வளர்ச்சிக்கு ஒரு முக்கிய சான்றாக அமைந்துள்ளது. அதிக பங்கேற்பும், விளையாட்டு முன்னோடிகளின் ஊக்கமும், திறமை வளர்ப்பில் அர்ப்பணிப்பும் இந்த நிகழ்வை புதிய தரநிலைக்கு கொண்டு சென்றன. மின் மற்றும் மன விளையாட்டுகள் இளைஞர்களை கவரும் வேகத்தில் வளர, ஸ்கில் ஆன்லைன் கேமிங் கூட்டமைப்பு, அடுத்த தலைமுறை சாம்பியன்களை உருவாக்கவும், இந்தியாவின் உலகளாவிய நிலையை வலுப்படுத்தவும் பணியாற்றி வருகிறது.