Thursday, November 20, 2025

இனி ஆன்சைட் போகிற ஆசையெல்லாம்.. விட்டுடுங்க.. ஐடி ஊழியர்களுக்கு செக் வைத்த டிசிஎஸ், இன்போசிஸ்

இனி ஆன்சைட் போகிற ஆசையெல்லாம்.. விட்டுடுங்க.. ஐடி ஊழியர்களுக்கு செக் வைத்த டிசிஎஸ், இன்போசிஸ்

சென்னை: டிசிஎஸ் நிறுவனம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைவாகவே எச்.1 பி விசாக்களை வழங்கி உள்ளது. டிசிஎஸ் நிறுவனம் விசா அனுமதிகளை கிட்டத்தட்ட பாதியாக குறைத்து, மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. ஒட்டுமொத்தமாக, இந்திய ஐடி நிறுவனங்கள் தற்போது புதிய H-1B விசா அனுமதிகளில் ஐந்து சதவீதத்திற்கும் குறைவாகவே பெற்றுள்ளன.


அமெரிக்க H-1B விசா கட்டணங்கள் 100,000 டாலராக அதிகரிக்கப்பட்டதை அடுத்து, இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. இனி ஆன்சைட் பணிகளை குறைக்க போவதாக அந்த நிறுவனங்கள் அறிவித்து உள்ளன.


இனி அமெரிக்க H-1B விசா மீதான தங்களின் சார்புநிலையைக் கணிசமாகக் குறைத்து, அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கான பணிகளை மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டுவரப் போவதாக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அதாவது ஆன்சைட் பணிகளை இனி செய்ய போவது இல்லை.. அல்லது குறைக்க போகிறோம் என்று அறிவித்து உள்ளன.


இனி ஆன்சைட் பணிகள் இல்லை


கடந்த சில தினங்களுக்கு முன் அமெரிக்க அரசு இந்த திடீர் கட்டண உயர்வை அறிவித்தது. H-1B விசாவைப் பெறும் மிகப்பெரிய நாடாக இந்தியா உள்ளது, ஏனெனில் கிட்டத்தட்ட 71% விசாக்கள் இந்தியர்களுக்கு வழங்கப்படுகின்றன. இது நிறுவனங்களுக்கு பெரும் சுமையாக மாறியுள்ளது. ஒரு நபருக்கு 88 லட்சம் ரூபாய் வரை கொடுத்து அமெரிக்கா கொண்டு செல்ல முடியாது. அது பல ஊழியர்களின் ஆண்டு சம்பளத்தை விட அதிகம். இத்தனை காலம் இது வெறும் 1 லட்சம் ரூபாயாக இருந்தது.


இதனால் இந்த நிறுவனங்கள் அமெரிக்காவிலிருந்து பணிகளை இந்தியாவுக்கு மாற்றும் திட்டத்தைக் கொண்டுள்ளன. இதன் மூலம் அமெரிக்க H-1B விசா கட்டண உயர்வால் ஏற்படும் செலவுகளைத் தவிர்க்க முடியும் என்றும், இந்தியாவிலேயே அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


புதிய H-1B விசா அனுமதி


2025 ஆம் ஆண்டுக்கான புதிய H-1B விசா அனுமதிகளில் அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான அமேசான், கூகிள், மைக்ரோசாஃப்ட் மற்றும் மெட்டா ஆகியவை அதிக எண்ணிக்கையைப் பெற்றுள்ளன.


இந்த ஆண்டு அமேசான் நிறுவனம் நான்காயிரத்திற்கும் அதிகமான புதிய H-1B விசா அனுமதிகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது. மெட்டா தனது H-1B விசா அனுமதிகளை கடந்த ஆண்டை விட கிட்டத்தட்ட இரு மடங்காக உயர்த்தியுள்ளது.


மைக்ரோசாஃப்ட் மற்றும் கூகிள் நிறுவனங்களும் ஒவ்வொன்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசா அனுமதிகளைப் பெற்றுள்ளன. அதேசமயம், இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களான டிசிஎஸ், காக்னிசென்ட், எல்டிஐ மைண்ட்ரீ மற்றும் ஹெச்சிஎல் ஆகியவை புதிய H-1B விண்ணப்பங்களை கணிசமாகக் குறைத்துள்ளன.


டிசிஎஸ் நிறுவனம் கடந்த ஆண்டை விட கிட்டத்தட்ட பாதியாக விசா அனுமதிகளைக் குறைத்து, மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. ஒட்டுமொத்தமாக, இன்போசிஸ், இந்திய ஐடி நிறுவனங்கள் தற்போது புதிய H-1B விசா அனுமதிகளில் ஐந்து சதவீதத்திற்கும் குறைவாகவே பெற்றுள்ளன.


இந்திய நிறுவனங்கள் அமெரிக்காவில் உள்ளூர் அளவில் அதிக பணியாளர்களை நியமிப்பது, தானியங்கி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது மற்றும் களப்பணியாளர்களைச் சார்ந்திருப்பதைக் குறைப்பது போன்ற காரணங்களால் இந்த சரிவு ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.


அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு (AI), கிளவுட் மற்றும் உயர் தொழில்நுட்ப திட்டங்களுக்கு ஆதரவளிக்க வெளிநாட்டு ஊழியர்களை அதிக அளவில் பணியமர்த்துகின்றன. H-1B விசா ஸ்பான்சர்ஷிப் செலவு மற்றும் சட்ட இணக்கச் செலவுகள் அதிகரித்துள்ளதால், சில நிறுவனங்கள் குறைவான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கும் இது ஒரு காரணமாகும்.