மீனம்பாக்கம் லயன்ஸ் கிளப் மற்றும் மிஷன் குரு தேவா பவா இணைந்து வழங்கிய ‘வித்யா சேவா சம்மான்’ விருதுகள் 2025
கல்விக்கும், பள்ளி மாணாக்கர்களுக்கும் மிகச் சிறப்பான பங்களிப்பை வழங்கியதற்காக ஆசிரியர்களை இவ்விருதுகள் கவுரவிக்கின்றன.
சென்னை, 5 செப்டம்பர் 2025:
லயன்ஸ் கிளப் ஆஃப் மீனம்பாக்கம் மற்றும் மிஷன் குரு தேவா பவா ஆகிய இரு அமைப்புகளும் ஒருங்கிணைந்து கோபாலபுரத்திலுள்ள D.A.V. மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வித்யா சவா சம்மான் விருதுகள் 2025 நிகழ்வை முதன் முறையாக நடத்தின. மிக சிறப்பாக நடைபெற்ற இவ்விழாவில், பள்ளி மாணவர்களின் வாழ்க்கையிலும் மற்றும் கல்வி சூழலமைப்பிலும் நீடித்து நிலைக்கும் தாக்கத்தை செய்திருக்கும் 20 ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
தமிழ்நாடு மாநில அரசின் முன்னாள் தலைமைச் செயலர் டாக்டர். இறை அன்பு இவ்விழாவில் கலந்து கொண்டு சிறந்த ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கினார்; மேலும் “நாட்டின் வளர்ச்சி கட்டமைப்பில் ஆசிரியரின் பங்கு என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். கற்பித்தலில் உள்ள பெருமையை மேம்படுத்துகிற மற்றும் ஆசிரியர்களை கவுரவித்து பெருமைப்படுத்துகிற” இந்த விருதுகள் திட்டத்தை செயல்படுத்தியதை அவர் மனமார பாராட்டினார்.
பிரபல கல்வியாளரான திருமதி. வித்யா ஷங்கர் சக்ரவர்த்தி, “மகிழ்ச்சியான ஆசிரியர்கள், மகிழ்ச்சியான வகுப்பறைகள்” என்ற தலைப்பில் ஒரு அமர்வை மிகச்சிறப்பாக நடத்தினார். இவ்விழாவில் உரையாற்றிய DAV பள்ளிகள் குழுமத்தின் இயக்குநர் திருமதி. சாந்தி அசோகன், விருதுகள் வழங்கப்பட்ட சிறந்த ஆசிரியர்களை பாராட்டி கவுரவித்தார்.
மாணாக்கர்களுக்கும், பள்ளிகளுக்கும் மற்றும் கல்வி சூழலமைப்பிற்கும் மிக நேர்த்தியான பங்களிப்பின் மூலம் மேம்பாட்டை சாத்தியமாக்கியதற்காக பள்ளி தாளாளர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களால் விருதுக்கான சிறந்த ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். விருது பெற்ற ஒவ்வொரு ஆசிரியருக்கும் பாராட்டு சான்றிதழும், ₹21,000 ரொக்கப் பரிசும் இவ்விழாவில் வழங்கப்பட்டன.
அதிக ஊதியம் வழங்கும் கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றி அப்பணிகளை துறந்து பள்ளிகளில் கல்விப் பணி ஆற்ற தன்னை அர்ப்பணித்திருக்கும் ஆசிரியர்களை குறித்த ஒரு சிறிய ஆவணப்படம் இந்நிகழ்வின் போது வெளியிடப்பட்டது. கல்விப் பணி மீது ஆர்வத்தால் சுயநலமற்ற சேவையாற்ற வேண்டுமென்ற அவர்களது அர்ப்பணிப்பு உணர்வை இந்த குறும்படம் நேர்த்தியாக சித்தரித்தது.
மிஷன் குரு தேவா பவா அமைப்பின் இணை நிறுவனர் லயன்ஸ். CA அனில் கிச்சா பேசுகையில், “ஒரு ஆசிரியரே சமுதாயத்தை வடிவமைத்து அதன் தொடர்ச்சியாக தேசத்தை கட்டமைக்கிறார்” என்று குறிப்பிட்டார்.
லயன்ஸ் கிளப் ஆஃப் மீனம்பாக்கம்-ன் தலைவர் திரு. A. பாலாஜி கூறியதாவது: “வித்யா சேவா சம்மான் விருதின் மூலம், உண்மையான ஹீரோக்களான நமது ஆசிரியர்களை நாங்கள் கவுரவித்து போற்றுகிறோம்”.
தி சில்ட்ரன்ஸ் கார்டன் மேல்நிலைப்பள்ளி ஆசிரியரும், இவ்விருதை வென்றவருமான திருமதி. S. மாலா பேசுகையில், “அறிவு விளக்கை ஏற்றும் ஆசிரியர்கள் மானுடத்தின் சுடரை அணையாமல் பாதுகாக்கின்றனர்; இந்த உன்னதமான முன்னெடுப்பு பணியின் ஒரு அங்கமாக செயல்படுவதில் நான் பெருமிதம் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டார்.
மிஷன் குரு தேவா பவா குறித்து
2012-ம் ஆண்டில் பட்டயக் கணக்காளரும், அரசியல் விமர்சகருமான திரு. S. குருமூர்த்தியின் வழிகாட்டலின் கீழ் தொடங்கப்பட்ட இந்த இயக்கம், “ஆவணப்படங்கள், ஆசிரியர்களுக்கான கீதம், கலந்துரையாடல்கள் மற்றும் கல்விசார் சந்திப்பு நிகழ்வுகள் வழியாக கற்பித்தலின் பெருமையையும் மற்றும் ஆசிரியர்களின் கவுரவத்தையும் மேம்படுத்துகிறது. சமுதாயம் மற்றும் தேசத்தின் சிற்பிகளாக திகழும் ஆசிரியர்களை ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி மகிழும் ஒரு பாரம்பரியத்தை நிறுவுவது வித்யா சேவா சம்மான் நிகழ்வின் நோக்கமாகும்.
லயன்ஸ் கிளப் ஆஃப் மீனம்பாக்கம் குறித்து
இந்தியாவின் மிக தொன்மையான மற்றும் மிக பெரிய லயன்ஸ் கிளப் கிளைகளுள் ஒன்றாக புகழ்பெற்றிருக்கும் இது 60 ஆண்டுகளுக்கும் அதிகமாக சமுதாயத்திற்கு சேவையாற்றி வருகிறது. சென்னையில் சின்மயா நகரில் லயன்ஸ் சின்மயா மெடிக்கல் சென்டர் என்பதை நிர்வகித்து வரும் இந்த அமைப்பு இன்னும் பல சமூக நல முன்னெடுப்புகளை அரப்பணிப்பு உணர்வோடு செயல்படுத்தி வருகிறது.