Monday, July 14, 2025

விழிஞ்சம் துறைமுகம் - கடல்சார் மேலாண்மைக்கான இந்தியாவின் நுழைவாயில்

விழிஞ்சம் துறைமுகம் - கடல்சார் மேலாண்மைக்கான இந்தியாவின் நுழைவாயில்

2025 ஆம் ஆண்டு மே மாதம், கேரளாவில் உள்ள விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை நாட்டிற்கு அர்ப்பணித்ததன் மூலம் இந்தியா தனது கடல் பயணத்தில் ஒரு மகத்தான அத்தியாயத்தை குறித்துள்ளது. உலக வர்த்தகத்தில் இந்தியாவின் நிலையை மாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த துறைமுகம், தெற்காசியாவின் கப்பல் பொருளாதாரத்தின் கதையை மீண்டும் எழுதத் தொடங்கியுள்ளது. 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சோதனை நடவடிக்கைகள் தொடங்கியதில் இருந்து, விழிஞ்சம் துறைமுகத்துக்கு 380-க்கும் மேற்பட்ட கப்பல்கள் வந்துள்ளன. இதில் உலகளாவிய அளவிலான மிகப்பெரிய கொள்கலன் கப்பல்களும் அடங்கும். இந்த துறைமுகத்தில் 8 லட்சத்திற்கும் மேற்பட்டTEUs (இருபது அடிக்கு சமமான யூனிட்டுகள்) கையாளப்பட்டு உள்ளன. இது மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடியால் துறைமுகத்தை முறையாக நாட்டிற்கு அர்ப்பணிப்பதற்கு முன்பு ஒரு சக்திவாய்ந்த முன்னுதாரணத்தை அமைத்தது. குறிப்பாக, 24,346 TEUs, திறன் கொண்ட உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பலான எம்எஸ்சி இரினா, சமீபத்தில் இங்கு வந்தது. இது மிகப்பெரிய கொள்கலன் கப்பல்கள் (ULCVs) வருகைக்கு இந்த துறைமுகம் தயாராக இருப்பதைக் குறிக்கிறது..

மூலோபாய பலங்கள்

விழிஞ்சம் துறைமுகத்தின் முக்கியத்துவம் அதன் புவியியல் மற்றும் இயற்கையின் நன்மைகளில் உள்ளது. கிழக்கு-மேற்கு மற்றும் தூர கிழக்கு - மத்திய கிழக்கு ஆசிய சர்வதேச கப்பல் பாதைகளில் இருந்து வெறும் 10 கடல் மைல்கள் தொலைவில் அமைந்துள்ள இந்த துறைமுகம், 20 மீட்டர் வரை இயற்கையான ஆழத்தை கொண்டுள்ளது. இது இந்தியாவின் ஆழமான துறைமுகமாக அமைகிறது. இது தொடர்ச்சியான அகழ்வாராய்ச்சி இல்லாமல் ULCV-க்களை கையாள அனுமதிக்கிறது. குறைந்த பராமரிப்பு செலவுகள் மற்றும் குறைந்தபட்ச சுற்றுச்சூழல் இடையூறுகளை உறுதி செய்கிறது. விழிஞ்சம் இந்தியாவின் முதல் தானியங்கி துறைமுகமாகும். இது ஐஐடி மெட்ராசுடன் இணைந்து உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அதிநவீன தானியங்கி கப்பல்- ஷோர் கிரேன்கள், தானியங்கி யார்டு கிரேன்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் கப்பல் போக்குவரத்து மேலாண்மை அமைப்பு (VTMS) ஆகியவற்றை கொண்டுள்ளது.

இந்தியாவின் கடல்சார் எதிர்காலம்

இந்தியா தற்போது ஒரு வருடத்தில் சுமார் 5 - 6 மில்லியன் TEU-க்களை டிரான்ஸ்ஷிப் (ஒரு கப்பலில் இருந்து மற்றொரு கப்பலுக்கு மாற்றுதல்) செய்கிறது. இதில் சுமார் 75% கொழும்பு, துபாய் மற்றும் சிங்கப்பூர் போன்ற வெளிநாட்டு துறைமுகங்கள் வழியாக டிரான்ஸ்ஷிப் செய்யப்படுகிறது. இந்தியாவின் உள்நாட்டு டிரான்ஸ்ஷிப்மென்ட் தேவைக்கு விழிஞ்சம் ஒரு தீர்வாகும். இதன் முதல் கட்டம் ஆண்டுதோறும் 1.5 மில்லியன்  TEU-க்களை கையாளும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அடுத்தடுத்த விரிவாக்கங்களுக்கு பிறகு இதன் திறன் 4.5 மில்லியன் TEU-க்களாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது வெளிநாட்டு துறைமுகங்களை சார்ந்திருப்பதை குறைக்கிறது, வருவாய் தக்கவைப்பை அதிகரிக்கிறது. மேலும் மூலோபாய சுயாட்சியை பாதுகாக்கிறது..

மேலும், இந்த துறைமுகம் பிரதமர் கதி சக்தி முன்முயற்சி மற்றும் இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா வழித்தடத்தின் (IMEC) ஒரு முக்கிய அங்கமாகும். இது தளவாடங்கள் மற்றும் உலகளாவிய வர்த்தக இணைப்பை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது. விழிஞ்சம் துறைமுகத்தின் வளர்ச்சி ஆயிரக்கணக்கான நேரடி மற்றும் மறைமுக வேலைகளை ஆதரிக்கிறது. மேலும் கேரளாவில் உள்ளூர் தொழில்கள், சுற்றுலா மற்றும் சேவைகளை வளர்க்கிறது..



உலகளாவிய டைட்டன்களுக்கு சவால் விடுகிறது

கொழும்பு, சிங்கப்பூர், துபாய் போன்ற பிராந்திய டிரான்ஷிப்மென்ட் மையங்களுக்கு விழிஞ்சம் துறைமுகம் இந்தியாவின் பதிலாகும். ஒப்பிடக்கூடிய டிராஃப்ட் மற்றும் ஆட்டோமேஷன் உள்கட்டமைப்புடன், செயல்திறன் மற்றும் கப்பல் கையாளும் திறனில் இது இந்த துறைமுகங்களுடன் போட்டியிட முடியும். முக்கிய கடல் வழித்தடங்களுக்கு அருகாமையில் இருப்பது பயண நேரத்தை குறைக்கிறது. மேலும் கையாளுதல் கட்டணங்கள் ஒரு கொள்கலனுக்கு 200–300 டாலரை கணிசமாக குறைக்கிறது.

ஏற்கனவே, எம்எஸ்சி போன்ற முக்கிய உலகளாவிய லைனர்கள், பாரம்பரியமாக வெளிநாட்டு துறைமுகங்களால் ஆதிக்கம் செலுத்தப்படும் தங்கள் ஜேட் மற்றும் டிராகன் சேவை வழித்தடங்களில் விழிஞ்சம் துறைமுகத்தை ஒருங்கிணைத்துள்ளன. இது சர்வதேச கப்பல் போக்குவரத்து வட்டாரங்களில் அதன் வளர்ந்து வரும் ஈர்ப்பை அடிக்கோடிட்டு காட்டுகிறது.

நிலைத்தன்மை மற்றும் புதுமை

விழிஞ்சம் சர்வதேச துறைமுகம் தானியங்கி தளவாடங்கள், குறைந்தபட்ச கார்பன் உமிழ்வு மற்றும் திறமையான கழிவு மேலாண்மை போன்ற பசுமை நடைமுறைகளை ஒருங்கிணைக்கிறது. அதன் நிலையான உள்கட்டமைப்பு எதிர்கால துறைமுக மேம்பாட்டிற்கு ஒரு மாதிரியை வழங்குகிறது.

பத்து முக்கிய சிறப்பம்சங்கள்

இந்தியாவில் முதல் வகை: 20 மீட்டர் வரை இயற்கையான ஆழம் கொண்ட ஆழ்கடல், தானியங்கி கொள்கலன் டிரான்ஷிப்மென்ட் துறைமுகம்..

விரைவான சரக்கு கையாளும் திறன்: ஆரம்பத்தில் ஆண்டுக்கு 1.5 மில்லியன் TEU-க்கள் / 4.5 மில்லியன் TEU-க்களுக்கு மேல் அளவிடக்கூடியது..

மிகக் குறுகிய மாற்றுப்பாதை: சர்வதேச கிழக்கு-மேற்கு மற்றும் தூர கிழக்கு - மத்திய கிழக்கு ஆசியா சர்வதேச கப்பல் பாதைகளில் இருந்து 10 கடல் மைல்கள் மட்டுமே.

அதிநவீன தொழில்நுட்பம்: ஐஐடி மெட்ராசுடன் இணைந்து உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட 8 எண்ணிக்கை கொண்ட செமி தானியங்கி கப்பல்-ஷோர் கிரேன்கள், 24 எண்ணிக்கை கொண்ட முழு தானியங்கி யார்டு கிரேன்கள் மற்றும் VTMS ஆகியவற்றை கொண்டுள்ளது..

வேலை உருவாக்கம்: 600க்கும் மேற்பட்ட நேரடி வேலைகள் மற்றும் 5,000க்கும் மேற்பட்ட மறைமுக வேலைகள்.

ஒருங்கிணைந்த இணைப்பு: என்எச்-66 உடன் இணைக்கப்பட்டு 9 கி.மீ. நீளமுள்ள நிலத்தடி சுரங்கப்பாதையை கொண்ட 10.76 கி.மீ. நீளம் கொண்ட ரயில் பாதை திட்டமிடப்பட்டுள்ளது..

பசுமை துறைமுகம்: குறைந்தபட்ச அகழ்வாராய்ச்சி, குறைந்த உமிழ்வு மற்றும் அறிவார்ந்த தளவாட அமைப்புகள்.

உலகளாவிய அங்கீகாரம்: உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பலான எம்எஸ்சி இரினா கையாளப்படுகிறது.

நேவிஸ் என்4, ABB மற்றும் CAMCO ஆட்டோமேஷன் சிஸ்டம்ஸ் ஆகியவற்றால் நிர்வகிக்கப்படும் முனைய ஆட்டோமேஷன்.

கொள்ளளவு அதிகரிப்பு: கொள்கலன் கப்பல் தளத்தை கூடுதலாக 1,200 மீட்டர் விரிவுபடுத்துதல், கடலோர கப்பல்கள் மற்றும் பயண கப்பல்களை கையாளக்கூடிய 1,220 மீட்டர் பல்நோக்கு கப்பல் தளம் மற்றும் 250 மீட்டர் திரவ சரக்கு கப்பல் தளம் ஆகியவற்றை திட்டமிடுதல்.

நவீன சக்தியை சந்திக்கும் வரலாற்று மரபு

விழிஞ்சம் வரலாற்று வேர்களை கி.மு. 2 ஆம் நூற்றாண்டு வரை ஆய் வம்சத்தின் கீழ் கொண்டுள்ளது, இது ஒரு காலத்தில் மசாலா வர்த்தகத்திற்கான பரபரப்பான துறைமுகமாக இருந்தது. இன்று, இது இந்தியாவின் கடல்சார் நுழைவாயிலாக மீண்டும் முக்கியத்துவம் பெறுகிறது. இந்தத் திட்டம் அதானி குழுமத்திற்கும் கேரள அரசாங்கத்திற்கும் இடையேயான கூட்டு முயற்சியாகும். இது ஒரு பொது-தனியார் கூட்டாண்மை (PPP) கீழ் ஒரு கட்டுமானம்- சொந்தம்-செயல்படுத்ததுதல்-பரிமாற்றம் (BOOT) மாதிரியில் மேற்கொள்ளப்படுகிறது.

பொறியியல் அற்புதம் 

இந்தியாவின் ஆழமான 2,960 மீட்டர் நீளமுள்ள ஒரு அலைதாங்கியானது இந்த துறைமுகத்தை ஆழ்கடல்களில் இருந்து பாதுகாக்கிறது. மேலும் தடையற்ற வகையில் செயல்படுத்துகிறது. 800 மீட்டர் நீளமுள்ள ஒரு கொள்கலன் கப்பல் தளம் ஒரே நேரத்தில் மிகப்பெரிய கப்பல்களை நிறுத்த உதவுகிறது. எதிர்கால விரிவாக்கத்தில் கொள்கலன் கப்பல் தளத்தை 1,200 மீட்டர் நீட்டித்தல், அலைதாங்கியை 920 மீட்டர் நீட்டித்தல், 1220 மீட்டர் பல்நோக்கு கப்பல் தளம், பதுங்கு குழி வசதிகள், மேம்படுத்தப்பட்ட கிடங்கு மற்றும் உள்நாட்டு இணைப்பு மேம்பாடுகள் ஆகியவை அடங்கும்.

கடல்சார் அதிகார மையத்தை உருவாக்குதல்

விழிஞ்சம் வெறும் துறைமுகம் மட்டுமல்ல - ஆதிக்கம் செலுத்தும் கடல்சார் நாடாக உருவெடுக்க வேண்டும் என்ற இந்தியாவின் லட்சியத்தின் மூலக்கல்லாகும். ULCV-க்களுக்கு இடமளிக்கும் திறன், வெளிநாட்டு சார்புநிலையை குறைத்தல், மூலோபாய வழிகளை பாதுகாத்தல் மற்றும் பசுமை உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் ஆகியவை இந்தியாவின் உள்கட்டமைப்பு மறுமலர்ச்சிக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைகின்றன.

அடுத்த தசாப்தத்தில், இந்தியா 10 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற விரும்புவதால், விழிஞ்சம் போன்ற துறைமுகங்கள் அந்த வளர்ச்சிக்கு அடித்தளமிடும். இது வர்த்தகத்தை மேம்படுத்தும், இணைப்பு மூலம் ராஜதந்திரத்தை ஆதரிக்கும், மேலும் கேரளாவை ஒரு தளவாடங்கள் மற்றும் சுற்றுலா மையமாக மாற்றும்.

ஒவ்வொரு அர்த்தத்திலும், விழிஞ்சம் ஒரு துறைமுகம் மட்டுமல்ல - இது இந்தியாவின் கடல்சார் விழிப்புணர்வு மற்றும் மூலோபாய தொலைநோக்கு பார்வையின் சின்னமாகும்.


பத்திரிகையாளர் ராஜேஸ் கண்ணா

நிறுவனத்தின் அழைப்பின் பேரில் திருவனந்தபுரத்தில் இருந்து)