MSME நிறுவனங்களுக்கு இயந்திரங்கள் வாங்குவதற்கு பிரத்யேக நிதித்தேர்வுகளை வழங்க ஜோதி சிஎன்சி-யுடன் ஒத்துழைப்பை மேற்கொள்ளும் கோடக் மஹிந்திரா வங்கி
CHENNAI 2025 – இந்தியாவின் பிரபல வங்கியான கோடக் மஹிந்திரா பேங்க் லிமிடெட் (KMBL), சிஎன்சி இயந்திர தயாரிப்பில் முன்னணி வகிக்கும் ஜோதி சிஎன்சி நிறுவனத்துடன் ஒரு முக்கிய ஒத்துழைப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதை இன்று அறிவித்திருக்கிறது. குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு (MSME) மெஷின் டூல் (இயந்திர கருவிகள்) தொழில்துறையில் சாதனங்களை வாங்குவதற்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட நிதியுதவி தீர்வுகளை தனிப்பட்ட அடிப்படையில் வழங்குவதே இந்த ஒத்துழைப்பு நடவடிக்கையின் நோக்கமாகும்.
மேம்பட்ட நவீன சிஎன்சி இயந்திரத்தில் முதலீடு செய்து தங்களது தொழில் செயல்பாடுகளை விரிவாக்க விரும்பும் பிசினஸ் நிறுவனங்களுக்கு இந்த மூலதன நிதிக்கான அணுகலை எளிதாக்குவதும், துரிதமாக்குவதும் இந்த ஒத்துழைப்பு திட்டத்தின் நோக்கமாகும். இந்த ஏற்பாட்டின் கீழ், விரைவான மற்றும் அதிக நெகிழ்வுத் தன்மையுள்ள நிதியுதவியை ஏதுவாக்கும் விதத்தில் ₹3 கோடி வரை டிஜிட்டல் முறையில் இயந்திரங்கள் / சாதனங்கள் வாங்குவதற்கான கடன்களை கோடக் மஹிந்திரா வங்கி, MSME நிறுவனங்களுக்கு வழங்கும்.
கோடக் மஹிந்திரா வங்கியின் பிசினஸ் பேங்கிங், வசதியான பிரிவு, வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் துறையின் தலைவரும், தலைமை சந்தையாக்கல் அதிகாரியுமான திரு. ரோஹித் பாசின் இது தொடர்பாக கூறியதாவது: “குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களது வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் ஆதரவளிப்பது என்ற எமது பொறுப்பையும், அக்கறையையும் இந்த ஏற்பாடு பிரதிபலிக்கிறது. பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட நிதியுதவி தீர்வுகளை வழங்குவதன் மூலம் உற்பத்தி தொழில் நிறுவனங்கள், அவைகளின் இயக்க செயல்பாட்டை விரிவாக்கவும், நவீன தொழில்நுட்பத்தை ஏற்று அமல்படுத்தவும் மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிக்கவும் உதவுவதே எங்களது நோக்கமாகும்.”
இந்த சிறப்பான முன்னெடுப்பு திட்டமானது கீழ்கண்ட பிரிவுகளை உட்பட MSME துறையின் விரிவான உறுப்பினர்களுக்கு பயனளிக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது:
- பெரிய ஆட்டோமொபைல் தயாரிப்பு நிறுவனங்களுக்கு OEM சப்ளையர்கள்
- குறைவான இயந்திரங்களுடன் சிறிய அளவில் இயங்குகிற ஜாப் ஒர்க் நிறுவனங்கள்
ஜோதி சிஎன்சி ஆட்டோமேஷன் லிமிடெட்-ன் நிறுவனர், தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான திரு. பரக்கிரம்சிங் ஜி. ஜடேஜா பேசுகையில், “எமது வாடிக்கையாளர்களுக்கு இயந்திரங்களை வாங்குவதற்கான எளிதான நிதியுதவியை வழங்க கோடக் மஹிந்திரா வங்கியுடன் ஒத்துழைப்பு ஏற்பாட்டை மேற்கொள்வதில் நாங்கள் பெரும் உற்சாகம் கொள்கிறோம். எமது வாடிக்கையாளர்களது பிசினஸ் குறிக்கோள்களுக்கு இந்த நிதி முன்னெடுப்பு திட்டம் சிறப்பான ஆதரவை வழங்கும்; அத்துடன் இந்தியாவில் துல்லிய பாகங்கள் உற்பத்தியின் ஒட்டுமொத்த சூழலமைப்பை இது மேலும் வலுப்படுத்தும்,” என்று குறிப்பிட்டார்.
MSME துறையைச் சேர்ந்த நிறுவனங்கள் பெரிதும் விரும்புகிற வங்கிச் சேவைக்கான கூட்டாளியாக திகழ வேண்டும் என்ற கோடக்-ன் விரிவான உத்திக்கு இணக்கமானதாக இந்த ஒத்துழைப்பு ஏற்பாடு இருக்கிறது. பல்வேறு தொழில் பிரிவுகளில் வளர்ச்சியையும், மீள்திறனையும் வலுவுடன் முன்னெடுத்துச் செல்ல புதுமையான நிதிசார் தீர்வுகளை வழங்குவது கோடக்-ன் செயல்திட்டமாகும்.